நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவர் சோலை, பாடந்துறை, தேன் வயல், ஓவேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
இவ்வாறு ஊருக்குள் வரும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளையும் விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருவதால் மனித வனவிலங்கு மோதல் ஏற்பட்டு அப்பாவி மனிதர்களின் உயிர்கள் பலியாகி வருவதும் தொடர் கதையாகவே உள்ளது.
இந்நிலையில் கூடலூர் இருந்து மூலக்காடு பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் நின்றிருந்த மக்னா யானை ஒன்று திடீரென ஆக்ரோஷமாக ஓடி வந்து அரசு பேருந்தின் முன்பகுதியை தாக்கியது. இதில் அரசு பேருந்தின் முன் கண்ணாடி சேதமடைந்தது.
இதனை தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து ஒலியை எழுப்பியதால் மக்னா யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.
ஆக்ரோஷமாக யானை அரசு பேருந்தை தாக்கியதால் பேருந்தில் பயணித்தவர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர்.
தொடர்ந்து கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றி வரும் காட்டு யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்






