சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் ஜங்சன் அண்ணாதுரை தலைமையில் பழையசூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 20வது வார்டில் உள்ள மஜீத் தெரு, பெரியார்தெருவில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் சென்று கோரிக்கை மனுவை அளித்தனர். அதில்
சேலம் மாநகராட்சி 20வது வார்டுக்கு உட்பட்ட மஜீத்தெரு, பெரியார் தெரு வில் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சேலம் ஜங்சன் ரயில்வே ஸ்டேஷன் பின்புறமுள்ள கூட்ஸ் செட் பகுதியில் இருக்கும் பாதையை பல வருடங்களாக பயன்படுத்தி,
ரயில்வே ஸ்டேஷனுக்கும், பஸ் நிறுத்தத்துக்கும் இடையே சென்று வந்து கொண்டு இருந்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, மஜீத்தெருவுக்கும், ரயில்வ கூட்ஸ்செட் பகுதிக்கும் இடையில் உள்ள பகுதியில், சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில், தடுப்பு சுவர் கட்டப்பட்டது. அப் போது, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், சுவரின் ஒருபகுதியில் வழிப் பாதை வசதி ஏற்படுத்தப் பட்டது.
தற்போது, அந்த வழிப் பாதையை ரயில்வே நிர்வாகம் மீண்டும் அடைத்து தடுப்பு சுவர் கட்டியுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் சுமார் 1.5 கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், இஸ்லாமிய மக்களின் நலன் கருதியும். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் வசதிக்காகவும் அந்த இடத்தில் சுவரை அகற்றி, மீண்டும் வழிபாதை ஏற்படுத்தி தர வேண்டும். அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.