சேலம் மேட்டூர் அருகே உள்ள கூலிலைன் பகுதியில் பல ஆண்டுகளாக 55 குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த நிலையில் பட்டா வழங்க வேண்டும் என்று பலமுறை மனுக்கள் வழங்கியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி,பாதிக்கப்பட்ட மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பட்டா இல்லாததால் எந்தவித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருவதாக தெரிவித்தனர். ஒவ்வொரு வீடாக வந்து, மனுபெற்று சென்ற நிலையில் இதுவரை பட்டா வழங்கவில்லை என்றும் கூறினர்.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரை சந்தித்து அனைவரும் மனுவளிக்க அனுமதி வழங்கவேண்டும் என்று கூறி பாதிக்கப்பட்ட மக்கள் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அனைவரையும் காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் உள்ளே அனுமதிக்க முடியாது என்று காவல்துறையினர் தடுத்தனர். இதனால் பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது எங்களது கோரிக்கைகளை கூறுவதற்கு கூட காவல்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை என்று சத்தம் எழுப்பினர். காவலர்கள் படித்திருக்கும் நிலையில், ஆட்சியரை மக்கள் சந்தித்து மனுவளிக்க கூட அனுமதிக்கமாட்டீர்களா என்று கேள்வி எழுப்பியபோது, காவல் ஆய்வாளர் நான் படிக்கவில்லை என்று கூறினார்.மேலும் வாயுள்ளது என்று எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது என்று காவல் ஆய்வாளர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் உள்ளே அனுமதிக்கவில்லையா? என்று பேசியபோது,காவலர்கள் கோபப்பட்டு ஜாதியை வைத்து ஏன் பேசுகிறார்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைவரையும் மனுவளிக்க விட முடியாது, ஒரு சிலரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறினர். இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது