திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி வரதட்சணை கொடுமை தாங்காமல் தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பின் மூலமாக ஆடியோ மெசேஜ் அனுப்பி விட்டு கோயிலுக்குச் செல்லும் வழியில் காருக்குள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஏழு நிபந்தனைகளின் அடிப்படையில் இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று, உயிரிழந்த ரிதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரிதன்யா சோசியல் சர்வீஸ் அறக்கட்டளை மற்றும் பத்துக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் குழு மூலமாக பல்வேறு நோய்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் ரத்த தான முகாம் நடைபெற்றது
இந்த முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
முகாமை தொடர்ந்து ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மற்றும் தாய் ஜெயசுதா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பேசியதாவது…
ரிதன்யாவின் தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் வழக்கை உரிய பிரிவுகளில் பதிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையில் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை, மேலும், வழக்கு தாமதம் தான் ஆகும் என்றும், உரிய விசாரணை முடிந்த பிறகு சரியான பிரிவுகளின் கீழ் வழக்கை பதிய வேண்டும் என கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதோடு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது, தொடர்ந்து ரிதன்யா மரணத்திற்கு நீதி கிடைக்க அனைத்து மக்களும், நீதி அரசர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க ரிதன்யாவின் தாயார் ஜெயசுதா மற்றும் தந்தை அண்ணாதுரை கேட்டுக்கொண்டனர்.
மேலும், தங்களது மகள் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டியும் அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டியும் ரிதன்யாவை மகளாகவும் சகோதரியாகவும் தன் வீட்டு பிள்ளை போல பார்த்து ஆறுதல் கூறிய தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதோடு ரிதன்யாவின் பிறந்த நாளான இன்று மாலை ஐந்து மணிக்கு தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய வேண்டி வேண்டுகோள் விடுத்தனர்.
தனது மகளின் பிறந்த நாளான இன்று ரிதன்யா சோசியல் சர்வீஸ் என்ற அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறக்கட்டளையின் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு ஏற்படும் வரதட்சனை கொடுமை, வன்கொடுமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இலவச சட்ட ஆலோசனை மையம் ஏற்படுத்தப் போவதாகவும், அதன் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இறுதி வரை துணை நின்று வழிநடத்த போவதாகவும் ரிதன்யாவின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மண்டபத்தில் ரிதன்யாவின் உருவப்படத்திற்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ரிதன்யாவின் தாய் கண்ணீர் மல்க தனது மகளை நினைத்து அழுது புலம்பியது காண்பவரை கண்கலங்கச் செய்வதாக இருந்தது
