சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள சாமுண்டி வளாகத்தில் இன்று காலை காவிரி மற்றும் கள் உரிமை மீட்பு கருத்தரங்கம் நடந்தது .
இதில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கலந்து கொண்டார் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது,
முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி ,ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி கள் பற்றி பேசவில்லை இவர்களைப் போல டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கள் பற்றி பேசுவதில்லை.
தற்போது விஜய் மாநாடு நடத்த உள்ளார். அவர் கள் பற்றி பேசுவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.ஆனால் அவர் கள் பற்றி பேச மாட்டார் என்று தோன்றுகிறது.தற்போது தமிழ்நாடு அரசு நான்கரை கோடி கடன் வாங்கி உள்ளது .ஒவ்வொருத்தர் மீதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கடன் சுமை உள்ளது .எப்படி இந்த கடனை திரும்ப செலுத்த போகிறோம் என தெரியவில்லை .இந்த பிரச்சனைக்கு எந்த கட்சிகளும் தீர்வு காணப்போவதில்லை.மேட்டூர் அணை நூறு அடிக்கு மேல் 300 நாட்களுக்கு மேலாக உள்ளது .ஆனால் பல ஏரிகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது .முன்பு இருந்த சுமார் 7 ஆயிரம் நீர் தேக்கங்களை அரசு எடுத்துக் கொண்டு விட்டது .பல ஏரி குளம், குட்டை காணாமல் போய்விட்டது.வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சுமார் 83 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள்.இந்த நிலையில் கள்ளை கொண்டு தொழிற்சாலைகள் தொடங்கினால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.தமிழகத்தில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளது பனை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தேவை இல்லை .பூச்சி மருந்து அடிக்க தேவை இல்லை.கள் உலக தரம் வாய்ந்த ஒரு பொருளாகும் .என்ன விலைக்கும் கள்ளை விற்கலாம்.கள் குறித்து பல தலைவர்களுக்கு புரிதல் இல்லை தமிழக அரசு கள் இறக்க அனுமதி தர வேண்டும் .கள் கடைகளை திறக்க வேண்டும் கள்ளுக்கு தடை கூடாது.கள் போதை தரும் பொருள் என நிரூபித்தால் அவர்களுக்கு ரூபாய் 10 கோடி பரிசு தருவதாக அறிவித்திருக்கிறோம்.வருகிற டிசம்பர் மாதம் திருச்சியில் கள் விடுதலை மற்றும் மது விலக்கு மாநாடு நடத்த இருக்கிறோம்.இதில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்துகொள்ள அழைக்கப்பட உள்ளார்.பீகாரில் மதுவிலக்கு கொண்டு வந்த பின்னர் கொலைகள் மற்றும் விபத்துக்கள் குறைந்துள்ளது என்றும் குடும்பம் அமைதியாக உள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள் பீகாரில் மது குடித்து இறந்தால் நிவாரணம் தர மறுத்து விடுகிறார்கள்.
இந்த மாநாடு திருப்புமுனை ஏற்படுத்தும்.தேர்தல் வெற்றி தோல்வியை இந்த மாநாடு நிர்ணயிக்கும் என்று கூறினார்
இந்தக் கூட்டத்தில் இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தங்கவேலு,
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட தலைவர் தங்கவேலு, மற்றும் திருப்பூர் ,கோவை ,சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.