
சேலம் ஓமலூர் அருகே உள்ள தலைமை காவலர் சர்வதேச அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற உலக காவல்துறைக்கான தடகள போட்டியில் ஓமலூர் தலைமை காவலர் தங்கம், வெள்ளி, வெங்கலம் வென்று சாதனை படைத்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாகல்பட்டி கிராமத்தை சேர்ந்துவர் சுரேஷ்குமார். இவர் சேலம் இரும்பாலை மதுவிலக்கு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். தலைமை காவலர் சுரேஷ்குமார், ஒரு தடகள விளையாட்டு வீரர் ஆவர். காவல்துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, தங்கம், வெள்ளி, வெங்கலம் என 10-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.




இந்த நிலையில், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உலக காவல்துறை வீரர்களுக்கான தடகள போட்டிகள் நடந்தது. இதில், 30 நாடுகள் கலந்து கொண்டு விளையாடிய இந்த போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாடு காவல்துறை வீரரான தலைமை காவலர் சுரேஷ்குமார், நீளம் தாண்டும் போட்டியில், முதல் முயற்சியிலேயே சிறப்பாக தாண்டி தங்கம் வென்று சாதனை படைத்தார். தொடர்ந்து 100 மீட்டர் ஓட்ட போட்டியில் வெள்ளியும், 400 மீட்டர் ஓட்ட போட்டியில் வெண்கலமும் வென்று சாதனை படைத்தார். அவருக்கு சேலம் மாவட்ட காவல்துறை மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.